பழைய டயர் குடோனில் பயங்கர தீ விபத்து

நெல்லை மேலப்பாளையத்தில் பழைய டயர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-08-13 15:53 GMT
நெல்லை:
மேலப்பாளையத்தில் பழைய டயர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
 
பழைய டயர் குடோன்

நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் (வயது 56). இவர் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பழைய டயர்களை வாங்கி, புதிதாக ரீவைண்டிங் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இதற்காக அந்த பகுதியில் பெரிய குடோன் வைத்திருந்தார். அங்கு ஏராளமான பழைய டயர்கள், பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 

தீ விபத்து

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த டயர் குடோனில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையில் 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, காலை 8 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. 

பொருட்கள் சேதம்

இருப்பினும், குடோனில் இருந்த பழைய டயர்கள், பொருட்கள் மற்றும் 2 சிறிய வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்