சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை
திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
சுதந்திர தினவிழா
இந்திய சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை சுதந்திர விழா நடக்கிறது. இதற்காக கலெக்டர் விசாகன் காலை 9.02 மணிக்கு விழா மேடைக்கு வருகிறார்.
இதையடுத்து காலை 9.05 மணிக்கு கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார்.
இதற்காக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு நேற்று போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் போலீசார் துப்பாக்கியை ஏந்தியபடி கம்பீரமாக அணிவகுத்து சென்று ஒத்திகை நடத்தினர்.
பலத்த பாதுகாப்பு
இதற்கிடையே சுதந்திர தினவிழாவையொட்டி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் வெடிகுண்டுகளை கண்டறிவதற்கு 5 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த போலீஸ் படையினர் ரெயில் நிலையம், பஸ்நிலையம், வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தினமும் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் போலீஸ் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பழனி ரெயில் நிலையம்
இதேபோல் பழனி ரெயில்நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று பழனி ரெயில்நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளை ‘மெட்டல் டிடெக்கர்' கருவி மூலம் சோதனை செய்தனர்.