விலைவீழ்ச்சியால் சின்ன வெங்காயம் பட்டறையில் இருப்பு வைப்பு

விலைவீழ்ச்சியால் சின்ன வெங்காயம் பட்டறையில் இருப்பு வைப்பு

Update: 2021-08-13 14:35 GMT
கோவை

விலைவீழ்ச்சி காரணமாக  சின்ன வெங்காயம் பட்டறையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

சின்ன வெங்காயம் சாகுபடி

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர், காளம்பாளையம், வேடப்பட்டி, மாதம்பட்டி, குப்பனூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடைக்கு தயாரானது. 

விலை வீழ்ச்சி

தற்போது சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் விவசாயி கள் அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு விட்டனர். 

இதனால் களை செடி வளர்ந்து நிற்கின்றன. சில விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வருகிறார்கள். 

இதுகுறித்து காளம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி கூறியதாவது

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கியதால் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கர் ஒன்றுக்கு 4 டன் முதல் 5 டன் வரை மகசூலும் கிடைத்தது. ஆனால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

விவசாயிகளுக்கு நஷ்டம் 

தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.10 முதல் ரூ.15-க்கு தான் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 

இதன் காரணமாக சாகுபடி முதல் அறுவடை வரை செலவு செய்த பணம் கூட கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயம் கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பப்படும்.

 தற்போது அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக, சின்ன வெங்காயம் அனுப்பப்படுவது குறைந்து விட்டது. 

மேலும், சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்து உள்ளது. 

அரசு கொள்முதல் 

இதனால் நாங்கள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்யாமல், தோட்டத்திலேயே பட்டறை அமைத்து  அதில் இருப்பு வைத்து வருகிறோம். இந்த பட்டறையில் அதிக பட்சமாக 90 நாட்கள் வரை இருப்பு வைக்கலாம். 

அதன் பின்னர் கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து விடுவோம். எனவே விலைவீழ்ச்சி ஏற்படும்போது விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்க, சின்ன வெங்காயத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்