ரெயிலில் அடிபட்டு கடமான் பலி
ஒட்டன்சத்திரத்தில் ரெயிலில் அடிபட்டு கடமான் ஒன்று பலியானது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டெருமை, யானை, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சமீபகாலமாக இவை தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் தேடி கடமான் ஒன்று ஒட்டன்சத்திரம் நகர் பகுதிக்குள் நுழைந்தது.
அப்போது அது ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றது. அந்த நேரத்தில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சரக்கு ரெயில், அந்த கடமான் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கடமான் சம்பவ இடத்திலேயே இறந்துபோனது.
பின்னர் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், கால்நடை துறை டாக்டர்கள் மூலம் கடமான் உடலை பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த மானை விருப்பாட்சியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வனத்துறையினர் புதைத்தனர்.