ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதன் பின்புறம் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கவுரங்கா (வயது 21) என்பதும் இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
இவரது மனைவி மேற்கு வங்கத்தில் உள்ளார்.
கவுரங்கா தற்கொலை செய்து கொண்டரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.