வீட்டில் சிலிண்டரில் கியாஸ் கசிவு: சிகரெட்டை பற்ற வைத்தபோது தீப்பிடித்தது; வெல்டிங் தொழிலாளி கருகி சாவு

சிலிண்டரில் கியாஸ் கசிவு காரணமாக வீடு முழுவதும் கியாஸ் பரவி இருப்பது தெரியாமல் சிகரெட்டை பற்ற வைத்தபோது தீப்பிடித்து எரிந்ததில் வெல்டிங் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி, 3 மகள்கள் காயம் அடைந்தனர்.

Update: 2021-08-13 08:34 GMT
பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த பட்டூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 48). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சையது பாத்திமா (43). இவர்களுக்கு ஷீபா பாத்திமா (11), ஜாஸ்மின் (19), அணிஷ் பாத்திமா (20) என 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலையில் எழுந்த காஜாமொய்தீன் சிகரெட் பிடிப்பதற்காக லைட்டரை பற்ற வைத்தார். அப்போது திடீரென குப்பென்று வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் காஜா மொய்தீன் படுகாயம் அடைந்தார். மேலும் தீ பரவியதில் வீட்டில் படுத்திருந்த அவருடைய மனைவி மற்றும் மகள்கள் என 4 பேரும் தீக்காயம் அடைந்து அலறினார்கள்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஜா மொய்தீன் பரிதாபமாக இறந்து போனார்.

மேலும் அவருடைய 3 மகள்களும், மனைவியும் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அவருடைய மனைவி மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான காஜா மொய்தீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு காஜா மொய்தீனின் குடும்பத்தினர் தூங்க செல்லும்போது கியாஸ் சிலிண்டரை சரியாக அடைக்கவில்லை தெரிகிறது. இதனால் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் காஜா மொய்தீன் சிகரெட் பிடிக்க லைட்டரை பற்ற வைத்தபோது தீப்பிடித்து எரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்