கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-13 06:46 GMT
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் வசந்த் (வயது 32). இவர், ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணம் வசூலித்து தரும் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் வசந்தின் செல்போனுக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், ‘உங்களது கிரெடிட் கார்டு காலாவதியாகி விட்டது. புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பண பரிவர்த்தனை செய்யமுடியாது’, என்றும் கூறியிருக்கிறார்.

அந்த ஆசாமியின் பேச்சை நம்பி, தனது கிரெடிட் கார்டு குறித்த தகவல்கள் மற்றும் தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. ரகசிய எண்ணையும் வசந்த் கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே வசந்த் வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரத்து 180 எடுக்கப்பட்டதாக, அவரது செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்த், இதுதொடர்பாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்