திருவள்ளூர் அருகே மொபட்- பஸ் மோதல்; முதியவர் சாவு - டிரைவர் கைது
திருவள்ளூர் அருகே மொபட்- பஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 60). இவர் ஈக்காடு பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று மாலை இவர் தனது மொபட்டில் வேலையின் காரணமாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த நித்தியானந்தத்தை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான நாராயணபுரத்தை சேர்ந்த முனிரத்தினம் (55) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.