கோவையில் புதிய தொழில் பூங்கா

கோவையில் புதிய தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2021-08-12 22:52 GMT
கோவை

கோவையில் புதிய தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல்

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ-இந்தியா கூட்டரங்கில் தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தொழில் துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அரசு செயலாளர் அருண்ராய், கலெக்டர் சமீரன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய இணை மேலாண் இயக்குனர் இளம்பகவத், பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடன் உதவி

முன்னதாக உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சுயதொழில் தொடங்கிய 18 பயனாளிகளுக்கு ரூ.21.44 லட்சம் மதிப்பில் மானியத்தில் கடன் உதவிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழங்கினர். அதன் பின்னர் அமைச்சர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களிடம் பேட்டி அளித்தனர்.

அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

வேலை வாய்ப்பு

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில் வளர்ச்சியே முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கோவை மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் தொழிற்சாலைகள் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை குறித்து நேரில் அறிந்து கொள்வதற்கும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு அமைத்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேலாக புதிய தொழில் முதலீடுகள் ஈர்த்து 56,000 பேருக்கு புதிய வேலைப்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் கொரொனாவால் ஏற்றுமதி பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று (நேற்று) கோவையில் தொடங்கிய அமேசான் நிறுவனத்தின் வேர்ஹவுசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதிய தொழில் பூங்கா

கோவையில் புதிய தொழில் பூங்கா அமைப்பது குறித்த திட்டம் உள்ளது. தொழில்பூங்கா குறித்த திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார். கோவையில் பவுண்டரி தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதன் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக 'சென்டர் பார் எக்ஸலண்ட்' என்ற மையம் அமைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். 

மேலும் தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை கூறி இருக்கின்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை அரசு நிச்சயமாக முனைப்போடு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

தொழிற்பேட்டை

2006-11-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 316 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைக்க கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம், திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் ஆகிய பகுதியில் இடம் கையகப்படுத்தப்பட்டு, 555 மனைகளாக பிரிக்கப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வினர் அது தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்கினர்.

நாங்கள் அதை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அங்கு ரூ.18 கோடியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. 

316 ஏக்கரிலும் தொழிற்சாலைகள் உருவாக்கி ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டையை முதல்-அமைச்சரின் ஆணைக்கு இணங்க உருவாக்க இருக்கிறோம். இந்த தொழில் பேட்டை அமைந்தால் 50 ஆயிரம் பேர் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்