வாலாங்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
உக்கடம் வாலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது.;
கோவை
கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வாலாங்குளத்தில் பூங்கா, சைக்கிள் பயணத்திற்கு தனிப்பாதை, மிதக்கும் நடைபாதை, காட்சி கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் இங்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் நேற்று மாலை கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஏராளமான ஜிலேபி மற்றும் கட்லா வகை மீன்கள் செத்து மிதந்தன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். குளத்தில் அதிகப்படியான கழிவுநீர் கலப்பதால் ஆக்சிஜன் குறைவு காரணமாக மீன் செத்து மிதக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் குளத்தில் ரசாயனம் ஏதாவது கலந்ததால் இறந்ததா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.