கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.;
பெங்களூரு: ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடுப்பியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஊட்டச்சத்து குறைபாடு
உடுப்பியில் வத்சல்யா (அன்பு) திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு குழந்தைகளின் உடல்நிலை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட விஷயங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. உடுப்பி மாதிரியில் இந்த அன்பு திட்டம் மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும். அடுத்த 1½ மாதங்களில் மாநிலத்தில் அனைத்து குழந்தைகளின் உடல் நிலையும் பரிசோதிக்கப்படும். அது தொடர்பான விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்தால் அத்தகைய குழந்தைகளின் நலனில் அரசு கவனம் செலுத்தும். கிராமப்புறங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. இதனால் அவர்களின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
மருத்துவ நிபுணர் குழுவினர், கொரோனா 3-வது அலை அதிகளவில் குழந்தைகளை தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக தான் இந்த வத்சல்யா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அடுத்த வாரம் நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். 2-வது அலை முடிந்த பிறகும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை நான் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஊரடங்கை அமல்படுத்தி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவிலலை. வரும்முன் காப்பதே நல்லது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னொருபுறம் கொரோனா கண்காணிப்பு மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா எல்லையில் அமைந்துள்ள தட்சிண கன்னடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
பெற்றோருக்கு ஆறுதல்
பெங்களூருவில் கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை 543 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு குழந்தைகள் இறப்பு நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பெற்றோருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.