ஆபாச வீடியோ வழக்கின் விசாரணை நடந்தது எப்படி?; சவுமேந்து முகர்ஜிக்கு கா்நாடக ஐகோர்ட்டு கேள்வி
3 மாதம் விடுமுறையில் இருந்த போது ஆபாச வீடியோ வழக்கு எப்படி நடந்தது? என்பது குறித்து சவுமேந்து முகர்ஜியிடம் கேள்வி கேட்டு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: 3 மாதம் விடுமுறையில் இருந்த போது ஆபாச வீடியோ வழக்கு எப்படி நடந்தது? என்பது குறித்து சவுமேந்து முகர்ஜியிடம் கேள்வி கேட்டு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆபாச வீடியோ வழக்கு
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த ஆபாச வீடியோ வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி முன்னிலையில் நடந்தது. அப்போது இளம்பெண் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஆபாச வீடியோ வழக்கில் விசாரணை அதிகாரியாக பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி 3 மாதம் விடுமுறையில் இருந்தார். அவர், இல்லாமலேயே விசாரணையை முடித்து, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணை சரியாக நடைபெறாததால், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்’’ என்று வாதிட்டார்.
தலைமை நீதிபதி கேள்வி
இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒரு வழக்கில் சிறப்பாக விசாரணை நடைபெறும் என்பதற்காக தான் அனுபவம் மிகுந்த ஒரு அதிகாரி, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
அந்த விசாரணை அதிகாரி 3 மாதம் விடுமுறையில் இருந்ததால், இந்த வழக்கில் விசாரணை எப்படி நடந்தது?, அவரது அனுபவம், திறமை இந்த வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. விசாரணை அதிகாரி 3 மாதம் விடுமுறையில் இருந்ததால் சரியாக விசாரணை நடத்திருக்க சாத்தியமா? என கேள்வி எழுப்பினார்.
சவுமேந்து முகர்ஜிக்கு உத்தரவு
அதுபற்றி பதிலளிக்கவும் விசாரணை அதிகாரியான சவுமேந்து முகர்ஜிக்கு 20 நிமிடங்கள் தலைமை நீதிபதி காலஅவகாசம் வழங்கினார். ஆனால் அவர் கோர்ட்டு முன்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, 3 மாதம் விடுமுறையில் இருந்ததாலும், இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடந்ததா?, வழக்கு விசாரணையில் திருப்தி உள்ளதா? என்பதை பிராமண பத்திரம் மூலம் தெரிவிக்கும்படி சவுமேந்து முகர்ஜிக்கு தலைமை நீதிபதி ஏ.எஸ். ஓகா உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.