திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேரள மாநில பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேரள மாநில பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-08-12 20:51 GMT

திருச்சி, 
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேரள மாநில பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கேரளாவில் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை தொற்று பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. அதிக அளவில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வேகம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது அவற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

 எனவே, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும். அவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

ரெயில் பயணிகள் சோதனை

அதற்காக தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகனங்களில் வருவோர் கண்காணிக்கப்பட்டு, கொரோனா சான்று இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில் ரெயிலில் தமிழகத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் எந்த ரெயில் நிலையத்தில் இறங்குகிறார்களோ? அங்கு பாிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் மாநகராட்சி சுகாதார பணியாளர்களால் கொரோனா சான்றிதழ் கேட்கப்படுகிறது. சரியான சான்றிதழ் இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 8 மணிக்கும், பிற்பகல் 1.40 மணிக்கும் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வந்திறங்கிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முகவரி, செல்போன் எண் வாங்கி குறித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரமும் சுகாதார குழுவினர் சோதனையில் ஈடுபடுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்