நிலத்தை அபகரித்த 7 பேர் மீது வழக்கு
நிலத்தை அபகரித்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் மனோகரன் (வயது 42). இவர் கடந்த 2016-ம்ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி பெரம்பலூர் எளம்பலூர் சாலை, கணேசா காலனியை சேர்ந்த பலராமன் மனைவி மங்கம்மாளிடம் நிலத்தை அடமானமாக எழுதி கொடுத்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டி கட்டி திருப்பி செலுத்துவது என ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பலராமன் மற்றும் அவரது மகன்களான பாலாஜி, வெங்கடேசன் ஆகியோரிடம் வட்டியும், அசலுமாக பணத்தை மனோகரன் மாதந்தோறும் கொடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கந்து வட்டி போட்டு தாங்கள் அதிக பணம் தரவேண்டும் என பலராமன் கூறியுள்ளார். அதற்கும் மனோகரன் சம்மதம் தெரிவித்து தொடர்ந்து பணம் செலுத்தியுள்ளார். இந்தநிலையில் மனோகரனின் நிலத்தை வேறு ஒருவருக்கு பலராமன் எழுதி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த மனோகரன், பலராமனிடம் சென்று நீங்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன், எனது நிலத்தை திருப்பி தரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மீண்டும் ரூ.4 கோடி பணம் கொடுத்தால் நிலத்தை தந்து விடுகிறோம் என பலராமன் கூறியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக் கொண்டு நிலத்தையும் அபகரித்த பலராமன், அவரது மகன்கள் உள்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருச்சி போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் மனோகரன் புகார் மனு அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பெரம்பலூர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்து கந்து வட்டி வசூல் செய்ததுடன், நிலத்தை அபகரித்த பலராமன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.