கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை

திருவேங்கடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-12 19:31 GMT
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேன் டிரைவர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் லட்சுமணதுரை (வயது 40). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லட்சுமண துரை மகள்களுடன் வசித்து வந்தார்.

கள்ளக்காதல்

சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலத்தைச் சேர்ந்தவர் தெய்வானை (35). திருமணமான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், தெய்வானை மகள்களுடன் வசித்து வந்தார். பின்னர் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

லட்சுமணதுரை பணியாற்றும் நூற்பாலையில்தான் தெய்வானையும் வேலை செய்து வந்தார். லட்சுமணதுரை வேனில் ஊழியர்களை நூற்பாலைக்கு அழைத்து சென்றபோது, அவருக்கும், தெய்வானைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கண்டிப்பு 

இதனை அறிந்த தெய்வானையின் அண்ணனான குமார் (38) மற்றும் குடும்பத்தினர், தெய்வானையையும், லட்சுமணதுரையையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெய்வானை தனது வீட்டில் இருந்து வெளியேறி, மலைப்பட்டியில் உள்ள லட்சுமணதுரையின் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

கோவிலுக்கு சென்றபோது...

நேற்று முன்தினம் மாலையில் லட்சுமணதுைர, தெய்வானை ஆகிய 2 பேரும் குருவிகுளத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். இதற்கிடையே, குமார் தன்னுடைய மனைவி ராஜேசுவரி (33), நண்பரும், கார் டிரைவருமான தேசிங்குராஜா (35) ஆகியோருடன் காரில் மலைப்பட்டிக்கு சென்றார். அங்கு லட்சுமணதுரை, தெய்வாைன இல்லாததால், அவர்களைத் தேடி குருவிகுளம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு கோவிலில் இருந்த லட்சுமணதுரையை வெளியே அழைத்து வந்து குமார் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணதுரை கல்லால் குமாைர தாக்கியதாகவும், உடனே குமார் அரிவாளால் லட்சுமணதுரையை சரமாரியாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜேசுவரி, தேசிங்குராஜா ஆகியோரும் சேர்ந்து லட்சுமணதுரையை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணதுரை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லட்சுமணதுரையை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே லட்சுமணதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து குருவிகுளம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக குமார், அவருடைய மனைவி ராஜேசுவரி, கார் டிரைவர் தேசிங்குராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வேன் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்