தோட்டத்தில் நிறுத்தி இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

திசையன்விளை அருகே தோட்டத்தில் நிறுத்தி இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2021-08-12 19:20 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே தோட்டத்தில் நிறுத்தி இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.

மோட்டார் சைக்கிள்கள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது 51). இவருைடய மாமனார் ராமச்சந்திரனின் தோட்டம் திசையன்விளை அருகே கஸ்தூரிரெங்கபுரத்தில் உள்ளது. அந்த தோட்டத்தை பால்சாமி குத்தகைக்கு எடுத்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த தோட்டத்துக்கு கோதைநேரியை சேர்ந்த ராமன், உள்ளமுடையார், லட்சுமணன், திருவேங்கடநாதபுரம் நாராயணன் ஆகியோர் வந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஓட்டி வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் அங்குள்ள வேம்பு மரத்தடியில் நிறுத்தி இருந்தனர். 

தீயில் எரிந்து நாசம்

பின்னர் மாலையில் அவர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது, தங்களது 4 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து எலும்புக்கூடாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் குழாயும் கருகி நாசமாகி கிடந்தது.

இதுகுறித்து பால்சாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள்களுக்கு ஏதேனும் மர்ம கும்பல் தீ வைத்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்