மின்வேலியில் சிக்கி குட்டியானை சாவு
பந்தலூர் அருகே மின்வேலியில் சிக்கி குட்டியானை உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே மின்வேலியில் சிக்கி குட்டியானை உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோட்டங்களில் காட்டுயானைகள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே மூலக்கடை, தட்டாம்பாறை, சன்னக்கொல்லி, வட்டக்கொல்லி உள்பட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் விவசாயிகளே உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளனர்.
இந்த நிலையில் அந்த விவசாய தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வட்டக்கொல்லி கிராமத்துக்குள் குட்டிகளுடன் காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.
குட்டியானை சாவு
அப்போது ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி குட்டியானை உயிரிழந்தது. இதனால் சக யானைகள் பிளிறியபடி பாசப்போராட்டம் நடத்தின. பின்னர் நேற்று அதிகாலையில் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
அதன்பிறகு அந்த தோட்டத்துக்கு சென்ற தொழிலாளர்கள் குட்டியானை இறந்து கிடப்பதை கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் மனோகரன், வனவர் பரமேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
அப்போது மின்வேலியில் சிக்கி 4 வயது ஆண் குட்டியானை உயிரிழந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், அய்யன்கொல்லி உதவி செயற்பொறியாளர் தமிழ்அரசன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
வலைவீச்சு
பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, குட்டியானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த தோட்டத்தின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். அவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.