பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்குமா?
மகசூல் அதிகரித்தும் வருமானம் உயரவில்லை என்பதால் பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
மகசூல் அதிகரித்தும் வருமானம் உயரவில்லை என்பதால் பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பச்சை தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இதை சார்ந்து சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் உள்ளனர். இதுதவிர ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்காமல் உள்ளதால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களை பராமரிக்காமல் விட்டுள்ளனர்.
பட்ஜெட்டில் அறிவிப்பு?
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் பச்சை தேயிலை விலை கிலோ ரூ.24 வரை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். தொடர்ந்து விலை உயரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படிப்படியாக விலை குறைந்து வருகிறது. தற்போது பச்சை தேயிலை விலை கிலோ ரூ.14 மட்டுமே கிடைக்கிறது.
இதனால் நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் அறிவிக்க உள்ளது. இதனால் தேயிலை விவசாயிகளின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. பச்சை தேயிலை கிலோ ரூ.30 என்று விலை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனி கவனம் செலுத்தி தேயிலை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நலிவடையும்...
இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:- பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் தேயிலை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் நாளுக்கு நாள் விலை குறைந்து வருவதால் தேயிலை தொழில் நலிவடையும் நிலை ஏற்படும். மகசூல் அதிகரித்தும் வருமானம் உயராமல் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.