பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரி மீது புகார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 52). இவர் தென்காசி மாவட்டம் இடைகாலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.
மேலும் பத்திரப்பதிவு பொறுப்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆவணங்கள் சிக்கின
இந்தநிலையில் நேற்று விருதுநகரை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பாரதி பிரியா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. மேலும் அவரது வீட்டில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.