காவலர் பணியிடங்களுக்கு 1800 பேர் தகுதி பெற்றனர்
ராமநாதபுரத்தில் நடந்த 2-ம் நிலை ஆண், பெண் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வில் 1,801 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம்,ஆக
ராமநாதபுரத்தில் நடந்த 2-ம் நிலை ஆண், பெண் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வில் 1,801 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
உடற்தகுதி தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. ராமநாதபுரத்தில் நடந்த இந்த தேர்வில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 766 ஆண்கள், 714 பெண்கள் என 3 ஆயிரத்து 480 பேர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன், உடற்தகுதி காண் தேர்வு கடந்த ஜூலை 26-ந்தேதி முதல் நடைபெற்றது. 17 நாட்களாக நடந்த உடல் தகுதி தேர்வில் ஆயிரத்து 617 ஆண்கள், 184 பெண்கள் என ஆயிரத்து 801 பேர் தகுதி பெற்றனர்.
601 ஆண்கள், 355 பெண்கள் என 956 பேர் தகுதி வாய்ப்பினை இழந்தனர். 548 ஆண்கள், 175 பெண்கள் என 733 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு தேர்வை கண்காணித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் தேர்வுக்குழுவினர் தேர்வை நடத்தினர். மாவட்ட காவல் அமைச்சு பணியாளர்கள் 100 பேர், 250 போலீசார், 20 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கண்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த 1,801 பேரில் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அவர்களின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.