ஆலவயல் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சியில் ஓ.எச்.டி ஆபரேட்டர்களாக பணிபுரியும் 12 தொழிலாளர்களுக்கு கடந்த 20 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்க வேண்டியும் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. சார்பில் ஆலவயல் ஊராட்சி அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வை.சதாசிவம் தலைமையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முகமது அலி ஜின்னா, துணைச் செயலாளர் அன்பு மணவாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் என்.பகுருதீன், ஆபரேட்டர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆலவயல் ஊராட்சியில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இயக்கி வருபவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவதற்கு அனுமதி பெறும் பொருட்டு உரிய கருத்துருவினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி அதனை அரசுக்கு அனுப்ப ஆவணம் செய்யவும். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் முழுவதும் கிராம ஊராட்சியில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டு டி.என்.ஆர்.டி இணையதளத்தில் பதிவுகள் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் பணியிடங்களுக்கு அனுமதியை பெறும் பொருட்டு உரிய கருத்துருவினை மாவட்ட கலெக்டர் மூலமாக அரசுக்கு அனுப்பிட ஆவணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தை ஊராட்சியின் நிதி நிலைக்கேற்ப வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து தொழிலாளர்கள் தரப்பில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.