மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பலி

திங்கள்சந்தை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பலியானார்.

Update: 2021-08-12 17:40 GMT
 திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பலியானார். 
ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு
திங்கள்சந்தை அருகே கல்லுக்கூட்டம் செட்டிவிளையை சேர்ந்தவர் சுந்தரதாஸ் (வயது 67). இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியூர் சென்ற சுந்தரதாசின் மனைவி ரஞ்சிதம் திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் இறங்கி நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து வர சுந்தரதாஸ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
திங்கள்சந்தை, பெரியாபள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுந்தரதாஸ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரதாஸ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த குளச்சல் பகுதியை சேர்ந்த சபீனும் காயமடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே சுந்தரதாசை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஏட்டு சுந்தரதாஸ் பரிதாபமாக இறந்தார். சபீனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்