ஊருக்குள் வராமல் செல்லும் தென்மாவட்ட பஸ்கள்
கிணத்துக்கடவில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் ஊருக்குள் வராமல் செல்கின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் ஊருக்குள் வராமல் செல்கின்றன. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அரசு விரைவு பஸ்கள்
கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மளிகை கடை, தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்கள் அடிக்கடி பஸ்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். அதற்கு வசதியாக கோவையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, சாத்தான்குளம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் திசையன்விளை, உடன்குடி, தென்காசி, ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஊருக்குள் வருவது இல்லை
கிணத்துக்கடவில் மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்பு இந்த பஸ்கள் அனைத்தும், கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து சென்றன. இதனால் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது.
தற்போது மேம்பாலம் கட்டப்பட்டதால், இந்த பஸ்கள் ஊருக்குள் வருவது இல்லை. மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த தென்மாவட்ட மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வருவது இல்லை. இதனால் நாங்கள் அந்த பஸ்களில் ஏற ஒரு கி.மீ. தூரம் உள்ள சாலைப்புதூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் அதிகாலை நேரத்தில் அங்கிருந்து வரும் பஸ்கள் சாலைப்புதூரில் இறக்கிவிடுகிறார்கள். அதிகாலை நேரத்தில் டவுன் பஸ் வசதியும் இல்லை. ஆட்டோக்கள் வசதியும் இல்லாத தால் பொருட்களை தூக்கிக்கொண்டு நடந்து வர சிரமமாக இருக்கிறது.
அதிகாரிகள் நடவடிக்கை
மேலும் பெண்கள் தனியாக நடந்து வருவதால் குற்றச்சம்பவங் கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.