ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

திண்டுக்கல் அருகே வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-12 17:28 GMT
திண்டுக்கல் : 


வீட்டுமனைகளுக்கு அனுமதி
திண்டுக்கல் அருகே உள்ள மூலச்சத்திரத்தை சேர்ந்தவர் விஜய கண்ணன் (வயது 40). இவருடைய அக்காள் மகன் பாலகார்த்திக் (25), உறவினர் ஈஸ்வரி ஆகியோருக்கு மூலசத்திரம் அருகே உள்ள  தாத்தாகவுண்டனூரில் 1 ஏக்கர் 41 சென்ட் நிலம் உள்ளது. அவர்கள் அந்த நிலத்தை 24 வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்தனர். 

இதற்காக விஜய கண்ணன், பாலகார்த்திக் ஆகியோர் பழக்கனூத்து ஊராட்சி அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றனர். அங்கு ஊராட்சி செயலாளர் லிங்குசாமியை (வயது 42), அவர்கள் சந்தித்து தங்களது நிலத்தை வீட்டுமனைகளாக வகைப்படுத்தி பதிவு செய்துதரும்படி மனு கொடுத்தனர். 

ரூ.50 ஆயிரம் லஞ்சம்
ஆனால் ஊராட்சி நிர்வாகம் வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விஜயகண்ணன், பாலகார்த்திக் ஊராட்சி அலுவலகத்திற்கு பல முறை சென்று கேட்டுள்ளனர். ஆனால் ஊராட்சி செயலாளர் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.  


இந்த நிலையில் வீட்டுமனைகளாக அனுமதி வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று ஊராட்சி செயலாளர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதலில் ரூ.40 ஆயிரம் தருவதாகவும், மீதி பணத்தை அனுமதி உத்தரவு கடிதம் பெறும்போது தருவதாக விஜய கண்ணன் கூறினார். 


ரசாயன பவுடர் தடவிய...
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜய கண்ணன், இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளரை ‘பொறி’ வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். 


அதன்படி ரூ.40 ஆயிரத்துக்கு ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை விஜய கண்ணனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். நேற்று பகல் 3 மணிக்கு ஊராட்சி செயலாளர் லிங்குசாமியிடம் லஞ்சம் பணம் தருவதாக விஜய கண்ணன் கூறினார். இதையடுத்து அவரை மூலச்சத்திரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு வரும்படி கூறினார். 
அந்த பணத்தை கொடுப்பதற்கு விஜய கண்ணனும், பாலகார்த்திக்கும் சென்றனர். அங்கு வந்த லிங்குசாமியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.40 ஆயிரத்தை பாலகார்த்திக் கொடுத்தார். 

 கைது-சோதனை
அப்போது அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ரூபா கீதாராணி மற்றும் போலீசார், லிங்குசாமியை கையும்களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை பழக்கனூத்து ஊராட்சி அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்றனர். அவருடைய அலுவலக அறையில் ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்