உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்தி முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையர் பழனிகுமார் வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்தி முடிக்கவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
ஆய்வுக்கூட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முக்கிய பணிகள்
கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:-
இந்திய அரசியலமைப்பின்படி ஜனநாயகத்தை காத்திடும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் தேர்தலை மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்திட வேண்டும். எனவே, நாம் தேர்தல் குறித்த அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். தேர்தலை பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்பு பணிகள், தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் குறித்த முக்கியபணிகளை உள்ளடக்கியுள்ளது. ஆகவே இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு வந்துள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்துகொண்டு வருகிற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்தி முடிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி
அதைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குச்சாவடி பட்டியல், தேர்தல்நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் மற்றும் தேர்தல் முதல் கட்ட ஆயத்தப்பணிகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்கள், உரிய படிவங்கள் மற்றும் அவசிய பொருட்கள் தயார்நிலையில் வைத்திருத்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வேட்புமனு வழங்குதல், வேட்புமனுபரிசீலனை உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் விழுப்புரம் மோகன், கள்ளக்குறிச்சி ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல்அலுவலர் அருண்மணி, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.