உடல்நலக்குறைவு: விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி
பேரறிவாளன் அனுமதி
விழுப்புரம்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்ட பேரறிவாளனின், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் வீட்டில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற அவரது தாயார் அற்புதம்மாள், தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அதன்பேரில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். மேலும் அவர் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தொடர் மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருகிறார்.
இதற்காக பேரறிவாளன் நேற்று ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாளும் உடன் வந்தார். அங்கு பேரறிவாளனுக்கு டாக்டர் குழுவினர் உரிய மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பிறகு, ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அந்த மருத்துவமனை முன்பு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.