வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை
வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பூர்,
வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார். விவசாயி. இவருடைய மனைவி செல்வி(வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கீழ் தளத்தை பூட்டிவிட்டு மேல் தளத்தில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலை செல்வி மேல்தளத்தில் இருந்து இறங்கி கீழே வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், துணி மணிகளும் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.
வலைவீச்சு
பின்னர் இதுபற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.