குட்கா, பான் மசாலா விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை. கலெக்டர் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரித்துள்ளார்.

Update: 2021-08-12 16:44 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பான்மசாலா

குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கு சிறுவர்களும் அடிமையாகி உள்ளதாக அதிர்ச்சியான செய்திகள் வெளிவருகின்றன. எனவே இப் பொருட்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை விதிக்கப்படுகிறது. 
மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா, பான் மசாலா போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. மீறி விற்பனை செய்தால் கடைக்கு உடனடியாக ‘சீல்’ வைப்பதோடு, சம்பந்தப்பட்ட நபர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தணிக்கை

மேலும் இதுகுறித்து மாவட்டத்தில் அடிக்கடி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளபடி, வியாபாரிகள் மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யாமல் புகையிலையில்லாத மாவட்டமாக ராணிப்பேட்டையை உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்