முன்கள பணியாளர்கள் தங்க வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு ரூ.2 கோடி கட்டண பாக்கி கொரோனா 3-வது அலையை எதிர்கொள்வதில் சிக்கல்

முன்கள பணியாளர்கள் தங்க வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு ரூ.2 கோடி கட்டண பாக்கி உள்ளது. இதனால் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

Update: 2021-08-12 16:32 GMT

தேனி:
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை பரவிய போது கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பணியில் ஈடுபட்டனர். தங்கும் விடுதியிலேயே அவர்களுக்கான உணவு வழங்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இத்தகைய முன்கள பணியாளர்கள் தங்க வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான விடுதி கட்டணம் மற்றும் உணவு செலவு தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மனு அளித்து, நீண்ட இழுபறிக்கு பிறகு அவர்களுக்கான தொகை வழங்கப்பட்டது.
ரூ.2 கோடி பாக்கி
இந்நிலையில் கொரோனா 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-வது அலையின் போதும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை 4 மாத காலம் முன்கள பணியாளர்கள் ஒருவாரம் பணி, ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என மாறி, மாறி பணியாற்றினர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு விடுதி கட்டணம் மற்றும் உணவு செலவுத்தொகை 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறும்போது, "விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், தங்கும் விடுதியில் உயிரை பணயம் வைத்து தான் தொழிலாளர்கள் பணியாற்றினர். ஆனால், கடந்த 4 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான கட்டண பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை. தேனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு மட்டும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு பாக்கி உள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், தங்கும் விடுதி உரிமையாளர்கள் உணவு வழங்குவதற்கு கூட கடன் வாங்கி செலவு செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். ஆனால், செலவுத் தொகை இன்னும் தங்கும் விடுதிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. எனவே மேலும் தாமதம் செய்யாமல் பாக்கித்தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்" என்றனர்.
இதேபோன்று தாமதம் நீடித்தால் கொரோனா 3-வது அலை பாதிப்பு ஏற்பட்டால் முன்கள பணியாளர்களை தங்க வைப்பதற்கு தங்கும் விடுதிகளை கொடுப்பதற்கு அவற்றின் உரிமையாளர்கள் தயங்கும் நிலைமை ஏற்படும். இது 3-வது அலையின் போது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.


மேலும் செய்திகள்