வேலூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு
சட்டமன்ற தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காததால் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர்
தேர்தல் செலவு கணக்கு
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுகளில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 70 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர், செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்குகளை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்து வந்தனர். அதன்படி கடந்த மாதம் 69 வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர்.
சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு
ஆனால் வேலூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மட்டும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
அதையடுத்து பன்னீர்செல்வம் மீது வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (ஜே.எம்.-4) போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, சுயேச்சை வேட்பாளர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.