போடியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஆணையாளர் பேச்சுவார்த்தை

போடியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2021-08-12 15:42 GMT
போடி:
போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலையோரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு வீடுகட்டி தர அரசு கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பணி கைவிடப்பட்டது. மேலும் அவர்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றும் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பட்டா வழங்க கூடாது என்றும், வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், நேற்று காலை குடிசை மாற்று வாரிய என்ஜீனியர்கள் கதிரேசன், வளர்மதி ஆகியோர் போடி நகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து வந்து இடத்தை அளக்க வந்தனர். அவர்களை தூய்மை பணியாளர்கள், குடியிருப்பு பகுதிக்கு உள்ளே வர விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். 
பின்னர் போடி நகராட்சி அலுவலகத்துக்கு தூய்மை பணியாளர்களை வரவழைத்து கமிஷனர் ஷகிலா சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தூய்மை பணியாளர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை அந்த வீட்டிலேயே தங்கலாம். அதன் பின் வீட்டை காலி செய்து விட வேண்டும் என்று கூறினார்.  எனினும், தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றும், பட்டா தான் வேண்டும் என்றும் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பின்னர் தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் கூறுகையில், சம்பவம் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.


மேலும் செய்திகள்