உலக யானைகள் தினம்

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2021-08-12 15:39 GMT
தளி
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
வனப்பகுதி
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மூங்கில், தேக்கு ஈட்டி வெல்வேல் வெள்ளை நாகம் கருந்துவரை கனும்பாளன் காட்டு எலுமிச்சை புளியன், கொடைவேலான் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் அரியவகை தாவரங்கள் வளர்ந்து வருகின்றன. வனப்பகுதியை ஆதாரமாகக் கொண்டு யானை புலி செந்நாய் சிறுத்தை புள்ளிமான் கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவை உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளை சார்ந்து உள்ளன. ஆனால் வனவிலங்குகளின் உணவுச்சங்கிலி தடைபடாமல் இருப்பதற்கும் வனம் என்றென்றும் செழுமையாக இருப்பதற்கும் யானைகளின் பங்கு முக்கியமானதாகும். 
நாளொன்றுக்கு பல கிலோ மீட்டர் தூரம் குடும்பத்தோடு பயணம் செய்து உணவை தேடும் யானை சாணத்தின் மூலமாக மரங்களின் விதைகளை வனப்பகுதிக்குள் ஆங்காங்கே தூவும் பணியை தடைபடாமல் செய்து வருகிறது. இதனால் உணவுக்காக ஒரு பகுதியில் வனத்தை அழித்தாலும் மறுபகுதியில் மரம் நடும் பணியை யானைகள் செய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதி எப்போதும் வளமுடன் இருப்பதுடன் மழை பொழிவு ஏற்படுவதற்கும் உறுதுணையாக இருந்து வருகிறது.
யானைகள் தினம்
அதன் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உலக யானைகள் தினம் நேற்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமை வகித்தார்.
ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே பொதுமக்கள், சுற்றுலாபயணிகள், வாகன ஓட்டிகளுக்கு யானைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் உடுமலை அமராவதி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள், மலைவாழ்மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்