நொய்யல் ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு

நொய்யல் ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு

Update: 2021-08-12 14:31 GMT
பேரூர்

பேரூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர், நொய்யல் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

பிளஸ்-1 மாணவர்

கோவையை அடுத்த வடவள்ளி அருகே பி.என்.புதூர் கோகுலம் காலனியை சேர்ந்தவர் பாக்கியநாதன். 

இவருடைய மகன் ரோகித் (வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். 

இவருடைய நண்பர் ஒருவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும்.

எனவே நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து வெளியே சென்று பிறந்த நாள் விழாவை கொண்டாட முடிவு செய்தனர். 

இதையடுத்து, ரோகித் உள் பட 9 பேர் பேரூர் காளம்பாளையத்தில் நொய்யல் உயர்மட்ட பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றுக்கு நேற்று முன்தினம் மாலை குளிக்க சென்றனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

அங்கு, நண்பர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ரோகித் எதிர்பாராதவிதமான ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றார். 

அவருக்கு நீச்சல் தெரியாததால், ஆற்றுத் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் ரோகித்தை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களால் முடிய வில்லை. இதனால் ரோகித் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

பின்னர், தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி ஆற்றுக்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி ரோகித்தின் உடலை மீட்டனர். 

அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நொய்யல் ஆற்றில் ஆபத்தான இடங்களில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்