வாழைக்காய் மண்டி வியாபாரி கத்தரிக்கோலால் குத்திக்கொலை

வாழைக்காய் மண்டி வியாபாரி கத்தரிக்கோலால் குத்திக்கொலை

Update: 2021-08-12 14:23 GMT
கோவை

வீடு வாங்கி தராத ஆத்திரத்தில் வாழைக்காய் மண்டி வியாபாரியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த அவருடைய மகன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது 

வாழைக்காய் மண்டி வியாபாரி

கோவையை அடுத்த சொக்கம்புதூர் அருகே கருப்பண்ண வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). 

இவர், வாழைக்காய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

இதனால் ராமச்சந்திரன் தனது மகன் கோவிந்தராஜ் (35), மருமகள் மற்றும் 2 பேரன்களுடன் வசித்து வந்தார். 

கோவிந்தராஜ் தனது தந்தையுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். 

அவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. இதன் காரணமாக அவர் தினமும் மது குடித்து விட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதை ராமச்சந்திரன் கண்டித்துள்ளார்.

வீடு கேட்டு தகராறு

இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியின் அருகே வீடு ஒன்று விலைக்கு வந்துள்ளது. அதை தனக்கு வாங்கித் தருமாறு கோவிந்தராஜ் தனது தந்தையிடம் கேட்டு வந்தார். இதற்கு ராமச்சந்திரன் சம்மதிக்க வில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கோவிந்தராஜ், இரவில் மது குடித்துவிட்டு போதை யில் வீட்டுக்கு வந்தார். அவர், வீடு வாங்கி கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்தார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட் டது. 


இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து, தனது தந்தை என்றும் பாராமல் ராமச்சந்திரனை கழுத்தில் குத்தினார். 

மகன் கைது

இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பிறகும் கோவிந்தராஜ் குடிபோதையில் அங்கேயே சுற்றி திரிந்தார். 

இது குறித்த தகவலின் பேரில் செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா மற்றும் போலீசார்  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 அவர்கள், ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து ராமச்சந்திரனை கொலை செய்த அவருடைய மகன் கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில், அவர், மதுபோதையில் தந்தையை கொலை செய்து விட்டதாக கூறினார்.  இதையடுத்து கோவிந்தராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்