சந்திரசேகரபுரம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சந்திரசேகரபுரம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை அருகருகே அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு எதிரே குளம் உள்ளது.
இந்த குளம் தற்போது தூர்வாரப்படாமல் நான்கு புறமும் புதர்கள் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் குளத்தை சுற்றி உள்ள புதரில் இருந்து விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து விடுகின்றன.
பள்ளிக்கும், குளத்துக்கும் இடையே சுவர் இல்லாத காரணத்தால் வெளி ஆட்கள் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளி வளாகம் மது கூடாரமாக மாறி விடுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மது அருந்துபவர்கள் பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.