செவிலியர்கள் போராட்டம்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் நர்சுகளை தரக்குறைவாக பேசும் மருத்துவக்கல்லூரி டீனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் நர்சுகளை தரக்குறைவாக பேசும் மருத்துவக்கல்லூரி டீனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனை டீன்
திருப்பூர்தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே தற்போது அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது.
இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. முன்னதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாக வள்ளி சத்தியமூர்த்தி இருந்து வந்தார். இதன் பின்னர் அவர் சேலத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சேலத்தில் இருந்து முருகேசன் திருப்பூர் அரசு மருத்துவனை டீனாக நியமிக்கப்பட்டார்.
நர்சுகள் போராட்டம்
இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 174 நிரந்தர நர்சுகள், 51 ஒப்பந்த நர்சுகள், 22 தற்காலிக நர்சுகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நர்சுகள் பணிக்கு வந்தவுடன் உடை மாற்ற ஒரு அறை இருந்துள்ளது. இந்த அறையை நர்சுகள் பயன்படுத்தி வந்தனர். இந்த அறையை டீன் முருகேசன் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்ததாக தெரிகிறது.
இதுபோல் நர்சுகள் லஞ்சம் வாங்குவதாகவும், மருந்து, மாத்திரைகளை வீடுகளுக்கு எடுத்து செல்வதாகவும் தரக்குறைவாக பேசி நர்சுகளுக்கு மனஉளைச்சலை முருகேசன் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நர்சுகள் நேற்று அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிட மாற்றம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்ட அவர்கள் டீன் முருகேசனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவருக்கு துணையாக இருந்து வரும் உறைவிட மருத்துவர்கள் செந்தில்குமார் மற்றும் வினோத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் கூறியதாவது டீன் முருகேசன் தொடர்ந்து நர்சுகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். நர்சுகளுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதில்லை. மேலும், நாங்கள் பயன்படுத்தி வந்த உடை மாற்றும் அறையையும் பறித்துவிட்டார். இதுபோல் நர்சுகளை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். இதனால் உடனே அவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--------
திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
-------