அனுப்பர்பாளையம்
அவினாசி அருகே 2 லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
லாரி
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 27. இவர் நேற்று முன்தினம் இரவு இவருக்கு சொந்தமான லாரியில் முந்திரி மற்றும் புண்ணாக்கு லோடு ஏற்றிக் கொண்டு கோவைக்கு வந்து கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த நல்லிகவுண்டம்பாளையம் அருகே சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ஜெயக்குமார் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு மெக்கானிக் வருவதற்காக காத்திருந்தார்
அப்போது பெங்களூருவில் இருந்து கோவைக்கு அட்டை லோடு ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் வயது 50 என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி திருப்பூரை சேர்ந்த செந்தில்குமாரின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது.
டிரைவர் பலி
பவுன்ராஜ் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் பவுன்ராஜ் ஓட்டி வந்த லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் இடுப்பாடுகளில் சிக்கிய டிரைவர் பவுன்ராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் பாதி வழியிலேயே பவுன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் லேசாக சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
---------------
---
Reporter : M. Balasubramanian Location : Tirupur - Annuparpalayam