செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-12 10:38 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி நிறுவன கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் முக்கியமாக உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் அளவு மற்றும் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், நிலுவையிலுள்ள மனுக்கள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான காரணத்தை மனுதாரருக்கு தெரிவித்து உரிய முறையில் விளக்கம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட பட்டாக்களின்படி அதனை அளவீடு செய்து உரிய நபர்களுக்கு அந்த இடத்தை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உரிய கோப்புகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து முழுமையாக பிரித்து வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வில் விவாதிக்கப்பட்டது.

நில மதிப்பு அதிகம் கொண்ட இந்த 2 மாவட்டங்களிலும், அரசு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், கருணாநிதி, அரவிந்த்ரமேஷ், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் அரசு கூடுதல் தலைமைசெயலாளர் பனீந்திர ரெட்டி, நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரிதிட்ட ஆணையர் டாக்டர்.டி.ஜி.வினய், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்