திருநின்றவூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; காங்கிரஸ் பிரமுகர் பலி
திருநின்றவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதிய விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் பலியானார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த திருநின்றவூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 40). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர், நேற்று இரவு வீட்டிற்கு செல்வதற்காக திருநின்றவூர் மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே மேம்பாலத்தில் எதிரே திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்த அறிவழகன் (25) என்பவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். படுகாயமடைந்த அறிவழகன் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்த பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.