கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி மாயம்

வைரஸ் தொற்றுக்கு உள்ளான மூதாட்டியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-08-11 21:20 GMT
மங்களூரு: வைரஸ் தொற்றுக்கு உள்ளான மூதாட்டியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

கொரோனா பாதிப்பு 

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வினய்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வினய்குமார், ராஜேஸ்வரி ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதனால் 2 பேரும் கொரோனா பரிசோதனை செய்து இருந்தனர். இதில் 2 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியானது. 

இதையடுத்து சுகாதாரத்துறையினர் தங்களை தனிமைப்படுத்தி விடுவார்கள் அல்லது ஆஸ்பத்திரியில் அனுமதித்து விடுவார்கள் என்ற பயத்தில் வினய்குமாரும், ராஜேஸ்வரியும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானார்கள். 

போலீஸ் தேடுகிறது

இந்த நிலையில் வினய்குமார், ராஜேஸ்வரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அவர்களது வீட்டிற்கு சுகாதாரத்துறையினர் வந்தனர். அப்போது வீடு பூட்டி கிடந்தது. ஆனால் வீட்டிற்குள் இருந்து ஒரு மூதாட்டியின் சத்தம் கேட்டது. பின்னர் இதுபற்றி சுள்ளியா போலீசாருக்கு, சுகாதாரத்துறையினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மீட்டனர்.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மூதாட்டியை சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினர் அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல பயந்து வினய்குமார் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் தலைமறைவு ஆனதும், அப்போது தனது தாயை வீட்டில் வைத்து வினய்குமார் பூட்டி சென்றதும் தெரிந்தது. தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்