காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமீன்

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கொலையில் கைதான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-08-11 21:19 GMT
பெங்களூரு: மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கொலையில் கைதான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கொலை

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கனிமவளத்துறை மந்திரியாக பணியாற்றியவர் வினய் குல்கர்னி. இவர் தார்வாரை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தார்வார் அருகே சப்தாபுரா பகுதியில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடத்தில் வைத்து பா.ஜனதா பிரமுகரும், தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான யோகேஷ் கவுடா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தார்வார் மட்டுமன்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யோகேஷ் கவுடா கொலையில் வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், மந்திரி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். ஆனால் யோகேஷ் கவுடா கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வினய் குல்கர்னி கூறி இருந்தார். 

வினய் குல்கர்னி கைது 

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்த போது முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, யோகேஷ் கவுடா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து யோகேஷ் கவுடா கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி வினய் குல்கர்னி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அரசு அதிகாரியான சோமு நியாமகவுடா உள்ளிட்ட சிலரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். 

மனு மீது விசாரணை 

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வினய் குல்கர்னி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு, பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். ஆனாலும் அவருக்கு மேற்கண்ட கோர்ட்டுகளில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வினய் குல்கர்னி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வினய் குல்கர்னியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதிகள் லலித், அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

நிபந்தனை ஜாமீன்

அப்போது வினய் குல்கர்னி சார்பில் ஆஜரான வக்கீல் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 4 நிபந்தனைகளுடன் வினய் குல்கர்னிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதாவது விசாரணைக்கு குறுக்கீடு செய்ய கூடாது, சாட்சிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள கூடாது, நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் உத்தரவு வரும் வரை தார்வாருக்கு செல்ல கூடாது, பெங்களூருவில் தான் தங்க வேண்டும். 

வாரத்திற்கு 2 முறை சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிபந்தனகைளை மீறினால் உடனடியாக ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

9 மாதங்கள் கழித்து....

தனக்கு ஜாமீன் கிடைத்தது பற்றி அறிந்ததும் வினய் குல்கர்னி மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். சிறையில் இருந்து 9 மாதங்கள் கழித்து வினய் குல்கர்னி வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்