ஏக்கருக்கு 90 டன் கரும்பு அறுவடை செய்து இயற்கை விவசாயி சாதனை
புளியங்குடியில் ஒரு ஏக்கருக்கு 90 டன் கரும்பு அறுவடை செய்து இயற்கை விவசாயி சாதனை படைத்துள்ளார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் ஜனாதிபதி விருது பெற்ற இயற்கை விவசாயி ஆவார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். பொதுவாக இந்திய அளவில் கரும்பு ஒரு ஏக்கருக்கு சராசரி அறுவடை 35 டன் ஆகும். ஆனால் விவசாயி அந்தோணிசாமி, தனது தோட்டத்தில் இயற்கை விவசாய முறையில் ஒரு ஏக்கருக்கு 90 டன் அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக கரும்பு விவசாயிகளிடையே மறுதாம்பு என்பது மூன்று முறை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இவர் 30-வது முறையாக மறுதாம்பு செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதை அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இளஞ்செழியன், துணை வேளாண்மை அலுவலர் வைத்தியலிங்கம், உதவி வேளாண்மை அலுவலர் பார்வதி ஆகியோர் அந்தோணிசாமி இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, கரும்பு ஒரு ஏக்கருக்கு 90 டன் அறுவடை செய்யப் பட்டதை உறுதி செய்தனர். இந்த சாதனையை செய்த இயற்கை விவசாயி அந்தோணிசாமியை வெகுவாக பாராட்டினர்.