வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உவரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-11 19:37 GMT
திசையன்விளை:
உவரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி

நெல்லை மாவட்டம் உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம். இவருடைய மனைவி விணோளி (வயது 51). இவருடைய வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக உவரி போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 298 மூடைகளில் சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பறிமுதல்

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திசையன்விளை வட்டார வழங்கல் அலுவலர் கணபதி, உவரி கிராம நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து அதை லாரிகளில் ஏற்றி சென்று வள்ளியூரில் உள்ள தமிழ்நாடு நூகர்பொருள் வணிக கழக கிடங்கில் ஒப்படைத்தனர். விசாரணையில் விணோளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் அரிசியை கிலோ ரூ.5-க்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. ஏற்கனவே இவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்