ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் சுதந்திரதின விழா அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
நெல்லை:
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
சுதந்திர தினவிழா
வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.
ஆனால் அந்த மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், வருகிற சுதந்திர தின விழாவை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அணிவகுப்பு ஒத்திகை
இந்த விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக்கொள்கிறார்.
இதையொட்டி நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். துப்பாக்கியுடன் முதல் படை முன்னோக்கி செல்ல, அதைத்தொடர்ந்து போலீசார் அணிவகுத்து சென்றனர்.
கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் சுதந்திர தின விழாவை எளிமையாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.