காகிதத்தில் அழகு பொருட்கள் செய்து அசத்தும் சிறுவன்
காகிதத்தில் அழகு பொருட்கள் செய்து சிறுவன் அசத்தி வருகிறான்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் காலனியை சேர்ந்த மகேந்திரகுமார்-சுசிலா தம்பதியின் மகன் ரக்சன் (வயது 6). இவன் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறான். ஆன்லைன் வகுப்பு தவிர மற்ற நேரங்களில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான யூடியூப்பில் காகிதத்தில் பல்வேறு அழகு பொருட்கள் தயாரிக்கப்படுவதை பார்த்த சிறுவன் ரக்சன், தற்போது அதேபோல் தானும் செய்து அசத்துகிறான். காகிதத்தில் பேப்பர் கப், ராக்கெட், கப்பல், வண்ணத்துப்பூச்சி, சிறுசிறு பூக்கள் என்று பல்வேறு பொருட்களை செய்து இருக்கிறான்.
இதுகுறித்து அவனது பெற்றோர் கூறுகையில், ‘ரக்சன் முதலில் பேப்பர் கப் ஒன்றை செய்தான். அவனது திறமையை பார்த்து நாங்கள் ஊக்கப்படுத்தவே, பல்வேறு பொருட்களை நேர்த்தியாக வடிவமைத்து உள்ளான். அந்த காகித பொருட்களை நாங்கள் வீட்டில் வைத்து அழகு பார்த்து வருகிறோம்’ என்றனர்.