நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 7 பேர் மீது வழக்கு

குளித்தலை அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-08-11 18:45 GMT
குளித்தலை
14 ஏக்கர் நிலம்
குளித்தலை அருகே உள்ள குன்னாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கோபால் (வயது 40). இவர் தோகைமலை அருகே உள்ள கழுகூர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இவருடைய தந்தையான சுப்பிரமணியன் தங்கள் பரம்பரை சொத்தை விற்றுவிட்டு குளித்தலை அருகே உள்ள ஆதனூரில் 14 ஏக்கர் நிலம் வாங்கி அதை கோபாலிடம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த நிலத்தின் சிறு பகுதியை ஆதனூரை சேர்ந்த ஆறுமுகம் (29) என்பவருக்கு அவர் விற்றதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
இதுதொடர்பாக கோபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஆதனூரை சேர்ந்த ஆறுமுகம், அவரது மனைவி பெரியக்காள், அவரது சகோதரர்களான காளிமுத்து (46), முத்துக்குமார் (36), திருச்சி மாவட்டம் சிறுகமணி சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி அன்னகாமாட்சி ஆகியோர் ஒன்று சேர்ந்து சம்பவத்தன்று கோபாலை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
7 பேர் மீது வழக்கு
இதுகுறித்து கோபால் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஆறுமுகத்தின் உறவினரான ஆதனூரை சேர்ந்த முத்து மனைவி விமலாராணி (35) சம்பந்தப்பட்ட நிலத்தில் கொட்டகை போட்டதாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த கோபால் இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கொட்டகையை போடக்கூடாது எனக்கூறி, விமலாராணியை சாதி பேர் சொல்லி திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமலாராணி அளித்த புகாரின் பேரில் கோபால் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்