புதுச்சேரிக்கு தனியாக பணியாளர் தேர்வாணையம் தரமுடியாது
புதுச்சேரிக்கு தனியாக பணியாளர் தேர்வாணையம் தரமுடியாது என்று வைத்திலிங்கம் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
புதுச்சேரி, ஆக.
புதுவை எம்.பி. வைத்திலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரிக்கு என்று தனியாக பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு என தனி தேர்வாணையம் அமைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீ்தாராமன், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் உறுதிமொழி தந்தனர்.
அதன் அடிப்படையில் நான் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினேன். அதாவது புதுச்சேரிக்கு பணி யாளர்கள் தேர்வாணையம் தேவை என்று எடுத்து கூறியிருந்தேன். அதற்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தரமுடியாது என்று மறுத்துள்ளது. ஏற்கனவே நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்கவேண்டும் என்ற வலியுறுத்தியதற்கும் வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு பதில் அளித்துவிட்டது.
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளபடி தேர்வாணையமும், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்கவும் மத்திய அரசை வலியுறுத்தி பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.