வேலூர் நகரில் பதிவெண் இல்லாத 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பதிவெண் இல்லாத 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
வேலூர்
வேலூர் நகரில் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்கள் அதிகளவு இயங்கி வருவதாகவும், அவற்றின் மூலம் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் மர்மநபர்கள் ஈடுபடுவதாகவும் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் மக்கான் சந்திப்பில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் வேலூர் வடக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத 50 மோட்டார் சைக்கிள்களை அதிரடியாக போலீசார் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளின் உரிய ஆவணங்கள், பதிவெண் கொண்டு வந்தால் மோட்டார் சைக்கிள் திரும்ப ஒப்படைக்கப்படும், என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் நகரின் பல்வேறு இடங்களில் நடத்திய வாகனத் தணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.