பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

Update: 2021-08-11 18:15 GMT
அனுப்பர்பாளையம், 
திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சியில் 8 நிரந்தர ஊழியர்கள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட தினக்கூலி தூய்மைப் பணியாளர்களும், 20 குடிநீர் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இதில் நிரந்த ஊழியர்கள் 8 பேரை தவிர மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். 
குறிப்பாக கொரோனா பொதுமுடக்க காலம் மற்றும் பேரூராட்சி மக்களின் சுகாதாரத்தை காப்பதில் அர்ப்பணிப்புடன் வேலை செய்து வருகிறார்கள். எனவே பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் தூய்மைப் பணியாளர்களையும், குடிநீர் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அரசு அறிவித்த கொரோனா கால ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரூராட்சி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்