உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக வள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார்நிலையில் வைக்க ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-08-11 18:14 GMT
திருவலம்

ஆய்வு கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப்பணிகள் குறித்த மண்டல ஆய்வு கூட்டம் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். கலெக்டர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை), அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), தேஷ்முக் சேகர் சஞ்சய் (ராணிப்பேட்டை), சிபிசக்கரவர்த்தி (திருப்பத்தூர்) கலந்து கொண்டனர்.

தயார்நிலையில் வைக்க வேண்டும்

கூட்டத்தில் 20-1-2021 மற்றும் 19-3-2021-ல் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட வார்டு எல்லைக்குட்பட்டு, வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வரைவு வாக்குச்சாவடி பட்டியலும் வெளியிடப்பட்டது.

அனைத்து கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் குடிநீர், சுகாதார வசதி, மின்சார வசதி, கதவு ஜன்னல்கள், சாய்தள வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவும், ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் ஒரு முறை அனைத்து பெட்டிகளையும் இயக்கி தயார் நிலையில் வைத்துக்கொள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளை கண்டறிந்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்